Friday, June 11, 2010

மாறும் ஒளியும், நகரும் கூண்டுகளும்

இயற்கை அன்னைக்குத் தாராளமான மனது, சுதந்திரமாக அனைத்து  உயிரினமும்  வாழ வேண்டும் என்று இவ்வளவு பெரிய உலகைத் தந்தாள். ஐந்து அறிவு உள்ள வரை அதை அப்படியே கேட்டுக்கொண்ட உயிரினங்கள், ஆறாம் அறிவு வந்தவுடன், அதை புறம் தள்ளின. இயற்கை அன்னையின் தேவை அவர்களுக்குத் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டன. இயற்கையைக் கட்டி ஆளும் திறன் உள்ள ஒரே உயிரினமாகத் தன்னை நினைத்துக் கொண்டு மற்ற உயிரினங்கள் மட்டுமல்லாமல், தன் சக உயிரினமும் தனக்கு அடிமையாய் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.

சுதந்திரம் யாருக்கு வேண்டும், அதுவும், அவள், ஒரு பெண் தரும் சுதந்திரம்? மனிதனுக்கு ஆசை, இந்த உலகம் அவன் காலடியில் அடிமையாய் இருக்க வேண்டும், அவன் கூறினால் சுதந்திரம் உண்டு, இல்லையேல், கீழ்படிதலே கருமம்.

அவனின் முன்னேற்றம் என்ற சொல்லின் கண்டுபிடிப்பின் நோக்கமே, குறுகிய இடத்தில் அவன் அமர்ந்து உலகை இயக்குவதும், ஆளுவதுமே. அந்த பாதையில் அவன் பல கூண்டுகளைக் கண்டு பிடித்துள்ளான், அவை சரியே என்று அவனுடைய சந்தத்திக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.

தன் கூண்டுக்குள் வாழ்வது மனிதனுக்குச் சுதந்திரத்தை அளிப்பதாக அவன் கருதிகிறான். அப்படி எல்லாவற்றிற்கும் கூண்டு உண்டு அவனிடம். தன் கூண்டு தன் வாழ்வு, என்று தன்னை நிலை படுத்திக் கொள்ளவே அனைத்தும்.மனிதனின் கூடுகள் கூண்டுகளுக்குள் வாழ்வதை நலம், இயற்கை, வாழ்வின் ஆதாரம் என்று கருதும் அளவுக்கு ஆகி விட்டது.

அப்படி அவன் அமைத்துள்ள கூண்டுகளிலே அவன் பயணிக்கிறான், ஒரு சிறு விளக்கின் ஒளியில் அவன் கூண்டுகள் அவனுடைய சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சிறைபடுகின்றன. பல சக மனிதர்களுக்கு அந்த சிறு ஒளி, வாழ்வின் சூரியன், அது நீடித்து விடாதா  என்று அவர்களுக்கு ஆசை. ஆனால், சிறைப்பட்டுள்ள கூண்டு மனிதர்களுக்கோ, அது பல உணர்ச்சிகளை உண்டாக்குகிறது, அருவருப்பு, தர்ம சங்கடம், எரிச்சல், வெறுப்பு, கோபம், இயலாமை, தவிப்பு, ஆத்திரம், பொறுமையின்மை; கூரை இல்லாத கூண்டுகளுக்குள்  இருக்கும் நம்மவர்களுக்கோ உணர்ச்சிகள் கொஞ்சம் அதிகமாகவே சீண்டப்படுகின்றன, சுடும் சூரியன், வியர்வை, அது தரும் மணம் , முன்னவர்களின் நேரடி சந்திப்புகள், அசுத்தமானக் காற்றை சுவாசித்தே ஆக வேண்டிய கட்டாயம், தலைக்கு  மேல் இருக்கும் கவச கிரீடம் அந்த காற்றைக் கூட சுவாசிக்க விடாமல் தொந்தரவு செய்வது. இவர்களின் வேண்டுதல்களோ, முன்னவர்களின் ஆசைகளுக்கு நேர் மறையானது. என்ன செய்ய? இதை தான், ஐந்து விரல்களும் ஒரே போல் இருக்காது என்று கூறி நியாயப்படுதுகின்றனர் அறிவில் சிறந்த அறிஞர்கள் என்ற கூட்டம்.

இதற்கு சரியான விடை என்று ஏதும் இல்லை, இது உண்மை, நாம் தரும் விடையை ஏற்கும் மன நிலை இன்றை அவசர உலக மக்களுக்கு இல்லை. கஷ்டப்பட்டு ஓடித் திரிந்து பணம் சம்பாதித்து, அதை சென்று மற்றவனிடம் கொடுத்து, அவன் கூறும் வைதியமாய் தாங்கள் சிதைத்து வைத்துள்ள இயற்கையைத் தேடி செல்வார்கள், ஆனால் நாம் இலவசமாக சொன்னால், அறிவுரை கூற இன்னுமொரு முட்டாள் வந்து விட்டன என்று உதாசீனப்படுத்தி விடுவார்கள்.

அந்த சில நிமிடங்கள், அவர்களைப் பல தருணங்களில் வந்து நினைவுப்படுத்தும். அது ஒரு சங்கிலித் தொடராகப் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், அதன் காரணத்தை அறிய அவனின் ஆறாம் அறிவால் இயலவில்லை.

சுற்றத்தாரின் வாய் சொல்லே மந்திரம், அதை வைத்தே அவனுடைய உலகம் இயங்குகிறது, அதை நம்பியே அவன் வாழ்க்கை, மற்றவரின் அங்கீகாரம் அவனின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படுகிறது, மற்றவரை நம்பியே வாழும் சூழல்.

சிறைப்பட்ட விலங்குகள் சீறுவது போல் சீறி பாயும் அவன் கூண்டுகள், விளக்கு ஒளி மாறும் அதே நொடியில். அடுத்த ஒளியில் அவன் மாட்டிக் கொண்டுத் திரும்பவும் அங்கேயே அவன் இருக்கக் கூடாது என்பதே அவன் அப்போதைய ஒரே நோக்கமாக இருக்கும், அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார், செய்கிறான். அந்த இடத்தை விட்டு ஓடும் ஆவல், அதன் அதன் பின் இருக்கும் காரணங்களை ஆராய்ந்து அறிய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதில்லை; அப்படி விபரீதமாக அவன் யோசித்து விடாமல் இருக்க அவன் கட்டாயப்படுத்தப் படுகிறான்.

தூரத்தில் ஒளி தெரிவதைப் பார்த்ததும் அதில் மாட்டி விடாமல் தப்பிக்க அவன் வேகம் கூட்டி அவனுடைய கூண்டை செலுத்துகிறான், விளைவு, சில சமயங்களில் வெற்றி, பல சமயங்களில் தோல்விகள், ஏமாந்த சமயங்களில் தழும்புகள். என்னைப் போன்றோருக்கு இதை வேடிக்கைத் தினம் பார்த்தும் இன்னும் அது முடிந்தபாடில்லை. இயற்கை அன்னை வேடிக்கையானவள் என்றால், செயற்கை தகபன்களோ இன்னும் நேர்மையானவர்கள், மீண்டும் ஒளி மாறுகிறது...

No comments:

Post a Comment