14 வயதிற்குள் இருக்கும் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி என்று ஒரு புதிய திட்டத்தை நம் பிரதமர் இன்று தொடங்குகிறார் என்று அனைத்து நாளிதழ்களும், தொலைக்காட்சி செய்திகளும் தலைப்பு செய்திகளாக அறைக்கூவல் விடுத்துக்கொண்டிருந்தன. தங்கள் பங்குக்கு கலைஞர்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருகின்றனர். கொஞ்சமாய் நம் நகரங்களை மொயித்துள்ள வானொலிகளும் அவர்களுடை பங்கை சிறப்பாய் செய்து பாராட்டுக்கள் பெற்றனர்.
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும், இன்று நான் என் தம்பி படிக்கும் பள்ளிகூடத்துக்கு அவனை பார்க்க போகின்றேன். இன்று அவனுக்கு பிறந்த நாள், பள்ளியின் விடுதியில் தங்கிப் படிக்கிறான், ஏழாம் வகுப்பு. சித்தப்பாவும் சித்தியும் அவனை பார்க்க போகின்றனர் என்று தெரிந்தவுடன், நானும் அங்குள்ள இளம் ஆசிரியைய்களை பார்த்து விட்டு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் எண்ணத்தில், நானும் வருகிறேன் என்றேன்.
நான் போகிறேன் என்று தெரிந்தவுடன், என் அப்பச்சியும் என்னுடன் சேர்ந்து கொண்டார், பேரனை பார்பதற்கு மட்டுமே என்று எண்ணிக்கொண்டேன்.
இன்று தான் அந்த நாள், மாலை நான்கு மணிக்கு கிளம்புவதாக நேற்று இரவு முடிவாயிற்று. என்ன ஆயிற்றோ தெரியவில்லை, நான் இரவு பேசி முடித்த பிறகு, சித்திக்கும் சித்தப்பாவுக்கும் இடையில் வாக்குவாதம். அதை பஞ்சயது செய்ய அம்மா காலங்காத்தாலையே கிளம்பி போய் வந்தார், நல்ல நடுவர் என்று மட்டும் நினைத்து கொண்டே என் தூக்கத்தை தொடர்ந்தேன்.
பணம் தான் காரணம். நீங்கள் எதற்கு அங்கு சென்றீர்கள் என்று அம்மாவை கடிந்துகொண்டேன். அவர்களுக்கு இடையில் இனிமேல் போகாதீர்கள் என்றேன், கடலில் கரைக்கும் காயமே.
அப்பச்சி வீட்டில் மதிய உணவு உண்ணும் போதே, இன்று இந்த சண்டையை பற்றி அவர்களிடம் கேட்காதீர்கள் என்று சொல்லிவிட்டேன், இதுவும் காயமே. அம்மாச்சி அதற்கு, 'அவளுக்கு வாய் அதிகம். மாப்பிளைட்ட எப்போ பாரு எதிர்த்து பேசறா'. அப்பாச்சி அதை ஆதரித்தார்.
கிளம்பினோம், 5 மணி இருக்கும், என் பங்கிற்கு, தம்பிக்காக அரை கிலோ கேக்கும், அரை கிலோ மிட்டாயும், அம்மாச்சி செய்த வடை, பாயசமும் என் வண்டி பெட்டியில் பூட்டினேன். அவர்களை இவை ஏதும் வாங்காதீர்கள் என்று முன்னமே சொல்லிவிட்டேன். நகரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த பள்ளி. 20 நிமிட பயணம். நினைத்தது போல் சித்தி என் வண்டியில் ஏறிக்கொண்டார்.
வழியில், அவர் பேசியது, ' நீங்கல்லாமாவது கலயாணம் கடிக்காம இருங்கடா, இல்லாட்டி கட்டிகிடவள மதிச்சு பழகுங்க. எனக்கு உங்க சித்தப்பவ காட்ட கூட இல்ல. நானா உங்க அம்மாட்ட சொல்லி, நிச்சயத்திற்கு அப்புறம், கோயிலுக்கு வர சொல்லி பார்த்தேன். இருந்தும் என்ன இப்போ, வாழ்க்கை போச்சே. தனியா வந்து வாழ தைரியமும் இல்ல, பிறந்த வீட்டுக்கு போக வழியும் இல்ல, செருப்படி தான் கிடைக்கும். என்ன வாழ்க்கைடா இது, பாழப்போன வாழ்க்கை' சிரித்துக் கொண்டே கேட்டேன். பேசி கொண்டே சித்தி சித்தப்பாவின் வண்டியை முந்தினார். உன்னை விட நான் எதிலும் குறைந்தவள் அல்ல என்பது போல், அவரின் முகம் இறுகி இருந்தது. சிரித்தேன்.
மேற்கிலிருந்து சூரியன் தனது மஞ்சள் மழையைய் பெய்தது. நல்ல காடு. சுத்தியும் எதுவும் இல்லை. சாலைகள் இபொழுதுதான் போட்டிருக்கின்றனர் என்று தெரிந்தது. பள்ளி கட்டிட வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. நல்ல கிராமம், விவசாயம் கம்மி.
எங்களின் வண்டிகளை பள்ளியின் பாதி கட்டப்பட்ட மதில் சுவர்களுக்கு வெளியே நிறுத்தினோம். சித்தி உள்ளே சென்றார், நான் பின் தொடர்ந்தேன். அங்கிருந்த வயதான காவலாளி, 'உள்ளே எல்லாம் போக கூடாது' என்று தடுத்தார். ' இங்கேயே நின்று கிரௌண்டில் பயன் விளையாடுகிறானா என்று பாருங்கள். இருந்தா கூப்டுக்கொங்கோ. இல்லன இந்த நம்பருக்கு போன் பண்ணி பேசுங்க' என்று சுவற்றில் ஒட்டி வைத்திருந்த ஒரு காகிதத்தை காட்டினார்.
நான் அழைத்தேன், ' நீங்க ஏனுங்க அங்க இருக்கீங்க. உள்ளே வந்து பையன பாருங்க' என்றார் ஏ.ஓ.
நான் ஏதும் சொல்லாமல், சித்தியையும் அப்பசியையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றேன். சித்தப்பா முன்னே சென்று அவனை வரச் சொல்லி கை காட்டிகொண்டிருந்தார். உள்ளே நாம் போகலாம் என்றேன் அவரிடம்.
பெரியவன் ஆகிவிட்டான் தம்பி! காலம் ஓடுகிறது என்று மீண்டும் ஞாபகம் வந்தது. புது துணி போட்டிருந்தான், பிறந்தநாள் துணி, சித்தப்பா எடுத்து கொடுத்தது. சித்தப்பா அவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தபின், 'டிரஸ் புடிச்சிருக்க?' என்றார். ' நல்ல இருக்குப்பா, ஆனா சட்டை மட்டும் கொஞ்சம் பெருசா இருக்கு' என்று சத்தின் கையை இழுத்து காட்டினான்.
'வளர்ற பைய்யன் தானே டா, அடுத்த வருஷம் செறியா இருக்கும்' என்று எனக்கு யாரோ சொன்னதை, நான் அவனுக்கு சொல்லி சமாதனம் படுத்தினேன், என்னை அறியாமலே வந்தது, இப்படி தான் தலைமுறை வளர்கிறது போல். சித்தி 'இந்த துணி நல்லாவே இல்லை. இப்படியா போய் யாராச்சும் துணி எடுப்பாங்க?' என்று சொன்னதும், ' அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா, எனக்கு புடிச்சிருக்கு, ஆனா சட்டை மட்டும் கொஞ்சம் பெருசு' என்று சரி படுத்தினான்.
'உன் தம்பி எங்க டா?' என்று சின்னவனைப் பற்றி கேட்டேன்.
'அவன் எங்காச்சும் இருப்பான்'என்றவன், சித்தியிடம்,' அம்மா கேக்க கோவில வெச்சு வெட்டலாம்மா?' என்று கோரிக்கையை முன் வைத்தான்.
'சரி' என்று சொல்லிக்கொண்டே அவனுடைய விடுதிக்கு நடந்தோம்.
மூன்று மாடி. கீழ் தளம் மட்டும் மாணவர்கள் இருந்தார்கள். மற்ற இரண்டு தளங்கள் இன்னும் வேலை நடந்து கொண்டே இருக்கிறது. அதிகமானோர் இல்லை. விளையாட்டு நேரம் என்பதால் பலர் வெளியில் விளையாடி கொண்டிருந்தனர். சின்னவனின் நண்பர்கள் அவனை அழைத்து வந்தனர். இருவருக்கும் ஆனா பொருட்கள் பிரித்து கொடுக்கப்பட்டது.
சித்தி மீண்டும் சட்டைப் பற்றி பேச ஆரம்பித்தார், தம்பி மீண்டும் அதே பதில் கூறிவிட்டு, அவனுடைய அறையில் தன் பொருட்களை வைய்க்கச் சென்றான். பின் தொடர்ந்தேன். அறையை சுத்தி பார்த்துவிட்டு, அவனுடை நண்பர்களுக்கு அறிமுகமானேன். அப்பாச்சி அச்சமயத்தில் அங்கிருந்த தேநீரை ருசித்தார். பெரியவனுக்கும் சிறியவனுக்கும் செலவுக்கு பணம் கொடுத்தேன். சின்னவன் வேண்டியதை கேட்டான், பெரியவனோ கொடுத்ததை கூட வேண்டாம் என்று சொல்லி, தன்னிடம் பணம் இருப்பதாக கூறினான், திணித்தேன்.
கேக்கு வெட்டும் நேரம். பாதி கட்டியிருந்த கோவிலின் முன் இருவரின் நண்பர்கள் படை சூழ சென்றோம். இனிதாய் வெட்டி, அனைவருக்கும் பகிர்ந்து அளித்தான். நன்று. என் சித்தப்பாவிடம், பள்ளிக்கூடம் பீஸ் குறித்து கேட்டு அவர் கூறிய 6 எண் தொகை என் இரண்டு வருட கல்லூரி படிப்பை விட அதிகம் என்று சொன்னேன், அப்போதுதான் உரைத்தது அப்பா,அய்யா, அம்மா எல்லாம் அந்த காலத்தில் எல்லாம் இது எவ்வள்ளவு தெரியுமா என்று தொடங்கும் வாக்கியங்களின் ஆழம். பொருளாதாரம் பற்றிய அறிவு குறுகியதே ஆனாலும், கடந்த ஒரு வருடத்தில் சர்க்கரை, அரிசி விலைகள் இரண்டு மடங்காக அதிகரிதிருப்பது பயத்தையே தருகிறது, எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று.
அவனுடைய வகுப்பை பார்க்கும் ஆசையை நிறைவேற்ற, பள்ளிக்குச் சென்றோம். ஒரு பெரிய அறை கணினி செய்முறை அறையாக, அதாங்க தமிழ கம்ப்யூட்டர் லேபுனு சொல்லுவோமே, இருந்தது. பக்கத்தில் கணிதத்திற்கு, ஆங்கிலத்துக்கு என்று தனித் தனி லேபுகள். பெரிய லைப்ரரி, புத்தகம் ஏதும் என்னை கவரவில்லை. இதெல்லாம் இப்ப தான் ஓபன் பண்ணுனாங்க என்று குறுந்தகவல் தந்தான் பிறந்தநாள் பையன்.
பள்ளிக் கட்டிட வேலைகளும் இன்னும் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் எனக்கு தெரியும் அந்த பள்ளி தொடங்கி இது தான் முதல் வருடம் என்று. கொஞ்சம் பண முதலீடு, நல்ல விளம்பரங்கள், பெரிய காடு சுத்தியும், ஊருக்கு வெளியில் இருந்தால் போதும், எந்த வரலாறும் பார்க்காமல் சேர்க்க பெற்றோர்கள் உள்ளனர். நாளைய தொழில் கல்வி என்பதை அறிந்திருக்கின்றனர். அடுத்த வருஷத்துல இருந்து போர்டெல்லாம் இருக்காதாம், வெறும் எல்.சி.டி. ப்ரோஜெக்டர்கள் மூலம் தான் பாடம் நடத்துவார்களாம், தகவல் உபயம், சின்ன தம்பி.
இருவரும் நாங்கள் அவர்களுடைய வகுப்புகளை பார்ப்பதை வேண்டாம், யாராச்சும் பார்த்தால் திட்டுவார்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அழைத்து சென்றேன். சொன்னது போலவே ஒரு அம்மணி வந்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று சொன்னார். நாங்கள் கேட்டுவிட்டு தான் வந்துள்ளோம் என்று சொல்லிவிட்டு, சுற்று பயணத்தை தொடர்ந்தோம். இந்த கோடை விடுமுறையில் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும்.
விடுதி நோக்கி நடக்கலானோம். இவனுக எப்போ பாரு எங்கள இங்க வரவே விடுவதில்லை, திட்டுவாங்க திட்டுவாங்கனு சொல்லியே தடுத்துருவாணுக, இன்னக்கி தான் ஸ்கூல உள்ள போய் பார்க்கிறோம் என்று சந்தோஷமாய் சொன்னார் சித்தி.
மைதானத்தில் இருந்த மாணவர்கள் எல்லாம் விடுதிக்கு சென்றிருந்தனர். வழியில் வலதுபுறமாக இருந்த மதில் சுவருக்கு பின்னல் நிறைய குடில்கள். கட்டிட வேலை செய்பவர்களின் வீடாம். சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவு சந்து இருந்தது. அவர்களையும் பள்ளியையும் இணைக்கும் பாலம். அந்த சந்திலிருந்து இரு சிறுமியர், ஒரு சிறுவன் மெல்லமாக பள்ளியைப் பார்த்து பார்த்து நடந்து வந்தனர்.நான் மெதுவாக நடந்தேன் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க. அங்கு இருந்த சறுக்கல், ஊஞ்சல் போன்ற விளையாட்டு பொருட்களில் விளையாட தான் அப்படி பதுங்கி பதுங்கி வந்தார்கள். யாரைக் கண்டு பயப்படுகிறார்கள் என்று யோசிக்கும் வேளையிலேயே பின் இருந்து ஏ.ஓ. ஒரு சதம் போட்டார். அவர்கள் சிட்டாய் ஓடி அந்த சந்தில் மறைந்தனர். சூரியன் முழுவதுமாக மறைந்திருந்தது.
குறிப்பு: இந்த கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பு எனக்ல்கு பிடிக்கவில்லை. உங்களின் தலிப்புகளை சொல்லலாம். பிடித்தால் மாற்றிவிடுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment